திங்கள், ஜனவரி 09, 2012

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு
ஓர் ஆய்வு
~ கம்பார் கனிமொழி ~ 






_________________________________________________________________________________

குயிலன்   :       அண்ணே, எனக்கு ஓர் ஐயம்.

அமுதனார் :     என்ன! எதைப் பற்றிய ஐயம்.

குயிலன்  :        தமிழ்ப் புத்தண்டைப்பற்றிய ஐயம். கேட்கலாமா?

அமுதனார் :    தமிழ்ப்புத்தாண்டு பற்றித்தானே. இன்றைய காலக் கட்டத்தில் இந்த ஐயம் எழுவது இயல்புதான். தயங்காமல் கேள். எனக்குத் தெரிந்தவரையில் சொல்கிறேன்.

குயிலன்:   நீண்ட காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும், சித்திரையில் பிறக்கும் ஆண்டுப் பிறப்பு, தமிழாண்டுப் பிறப்பில்லையா?

அமுதனார் :     தம்பி, நீண்ட காலமாக என்றால், எப்போதிருந்து? அதற்குமுன்,     இருந்தநிலை என்ன? என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குயிலன்   :        சொல்லுங்க.

அமுதனார் :        இன்று சித்திரையில் பிறப்பதாகக் கூறப்படும் ஆண்டுப் பிறப்பு.
                                 வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனின் ஆட்சி     
                                காலத்தில், கி.பி.78-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதென்பர்
                                இதற்குச் சாலிவாகன சகம் என்பது பெயர். சாலிவாகனன்
                               விக்கிரமாதித்தன் காலத்தவன். இந்த ஆண்டைக் கலியாண்டு   
                               என்றும் கூறுவர்

குயிலன்  :        இவ்வாண்டு வடநாட்டவர் ஆண்டு என்றால், இது எப்படித்  
                              தமிழ் ஆண்டானது?

அமுதனார் :    தென்னாட்டில் வடநாட்டவர் ஊடுருவலாலும், அவர்கள் 
                      ஆட்சிகளாலும் இந்த ஆண்டுமுறை படிப்படியாகத் தமிழகத்தில் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.

எந்தவோர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலை நிறுத்தப்படுகிறதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் கலைகள் போன்றவை அந்த நாட்டினர் பழக்க வழக்கங்களோடு, கலந்துவிடுவது இயல்பு. அதனால், சொந்த நாட்டினர், த ங்கள் தனித் தன்மையும் இழக்க நேரிடும். தமிழர் வாழ்வு அப்படித்தான் ஆகியுள்ளது. தனித்தன்மையை இழந்த நிலையில் தான் சித்திரையை ஆண்டாக ஏற்றுப் போற்றுகிறார்கள்.  

தம்பி, ஓர் எடுத்துக்காட்டு, இனம், சமயம், நாடு என்ற வேறுபாடின்றி, ஆங்கிலப் புத்தாண்டைப் பலரும் தங்கள் சொந்த ஆண்டுப் பிறப்புபோல,  கொண்டாடிவருகின்றனர்;   புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்; வாழ்வின் பயனையும் இழப்பையும் (பலாபலன்) கணிக்கின்றனர். எதனால்? ஆங்கிலேயர் ஆளுமை  உலகை ஆட்கொண்டதால்தான்.  

குயிலன்   :     சித்திரை எப்போது தமிழகத்தில் நடைமுறைக்கு  வந்தது?

அமுதனார் :   திட்டவட்டமாகத் தெரியவில்லை. சங்க காலத்திற்குப்
பிறகு, சங்கம் மாருவிய காலம் என்ற ஒன்று இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் தொடங்கியதுதான், தமிழகத்தில் பிற இனத்தவரின் ஆட்சி. இது, கி.பி. 200-ல், தொடங்கியது.  களப்பிரர் ஆண்ட இந்தக் காலக் கட்டத்தை இருண்ட காலம் என்பர். அன்று தொட்டு, தமிழகத்தில், பல்லவர்நாயக்கர், முகமதியர் ஆங்கிலேயர் எனப் பலரின் ஆட்சிகள் தொடர்ந்தன.

              பல்லவர் ஆட்சி

இவர்களில் பல்லவர்கள் கி.பி.600-ல் தொடங்கித் தோராயமாக 275 ஆண்டுகள், தமிழகத்தில் ஆட்சியை நடத்தியுள்ளனர். அவர்கள் காலத்தில்தான் ஆரியரின் ஆளுமை மிகுந்துள்ளது. அக்காலக் கட்டத்தில்தான், சித்திரை ஆண்டுப்பிறப்பு நடைமுறை கண்டதாகக் கூறுவர். ஏனெனில், களப்பிரர் ஆரியர்களுக்கு எதிர்ப்பானவர்கள் என்றும், பல்லவர்கள் ஆரியர்களுக்கு ஆதரவானவர்கள் என்றுங் கூறுவர்.    

பல்லவர்கள் ஆட்சியில்தான், தமிழ்நாட்டில் சமற்கிருதக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.   

வடமொழியும் தமிழும் கலந்த மணிபிரவாள நடை தமிழில் புகுத்தப்பட்டு மொழிச்சிதைவு ஏற்பட்டது.

பல்லாயிரக் கணக்காக  ஆரியர்களுக்கு - ஆரியர் வழிந்தோருக்குத் தமிழகத்தில் குடியிருப்புகளும், நிலங்களும் செல்வங்களும் வழங்கி, அவர்களைத் தமிழகத்தில் குடியேற்றி, நிலைபெறச் செய்தனர்.

அவர்களைத் தமிழர்களைவிட உயர்தவர்களாக்கினர்.  

அறியாத் தமிழர்களும் அவர்களை உயர்ந்தவர்களாகப் போற்றிக்கொண்டு தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டனர். அந்த நிலை இன்றும் தொடர்கிறது.

பல்லவர் ஆட்சியைத் தொடர்ந்து, ஏனையோர் ஆட்சியிலும், தமிழர்களாகிய பிறகாலச் சோழர் ஆட்சியிலும் இதே நிலைதான் தொடர்ந்தது

குயிலன்   :      சித்திரைப் பிறப்பு, தமிழாண்டுப் பிறப்பல்ல என்பதற்கு வேறு 
                             சான்றுகள் உண்டா?

அமுதனார் :     உண்டு. அவற்றில் முகாமையான மூன்றைக் குறிப்பிடலாம்.

 (1). சித்திரையில் பிறப்பதாகக் கூறப்படும் பிரவ முதல் அச்சய ஈறாகஉள்ள 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழாக இல்லை. அனைத்தும் சமற்கிருதப் பெயர்களா-கவே இருக்கின்றன.

 (2).  அந்த அறுபது பிறப்பாண்டுப் பெயர்கள் ஏற்பட்டதற்காகக் கூறப்படும் பழங்கதையும் தமிழர் பண்பாட்டை - மரபைக் காட்டவில்லை.

 (3).   சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.தை மாதத்தில்தான் நடைபெறுகின்றன. சித்திரையில் குழந்தை பிறப்பதும் தவிற்கப்படுகிறது.

  இவற்றைத் தவிர்த்து, ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுக் பல    
  கருத்துக்களையும். வெளியிட்டுள்ளனர். அவர்களில்
  இலக்கண இலக்கியங்களையும், புராண 
  இதிகாசங்களையும் ஆய்ந்து கற்றறிந்த பாவேந்தர் 
  பாரதிதாசனார்,
   
பத்தன்று நூறனறு பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு பொங்கல் நன்னாள்.

என்றும், தமிழ் இலக்கிய மொழியியல் அறிஞர் மு.வரதராசனார், தம், கண்ணுடையர் வாழ்வு, என்ற நூலிலே, முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். என்று ஆராய்ந்து கூறியுள்ளார். இவற்றிலிருந்து தைப் பிறப்பைத்தான் கற்ற பெரியோர்கள் போற்றியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
குயிலன்  :     அண்ணே! பழங்கதை என்று குறிப்பிட்டீர்களே! அந்தப் பழங்கதை 
                           என்ன?

அமுதனார்:    புராண இதிகாசக் கதைகளுக்கும் அவை சார்ந்த 
                            சொற்பொருளுக்கும் குறிப்பாக விளக்கம் கூறும் நூலான 
                    அபிதான சிந்தாமணி என்ற நூலின் வருஷம் என்ற சொல்லின் பொருள் விளக்கதைப் படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

குயிலன்   :    சரி, படித்துப் பார்க்கிறேன். தை என்பது தமிழ்ச்சொல்லா? சுறவம் 
                           என்று தை மாதத்திற்கு வேறு பெயர் வழங்கப் படுகிறதே?

அமுதனார் : தை என்பது தமிழ்ச்சொல்தான். ஒரு பொருளுக்கு ஒரு சொல்தான் இருக்குமென்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களும் இருக்கும். தை என்ற சொல்லுக்குக் குளிர்ச்சி என்ற பொருளு-முண்டு. குளிர்ச்சிமிக்கப் பருவ கால மாதத்திற்குத்  தை எனப் பெயர் வழங்கப்பட்டது. தையில் தரையும் குளிரும் என்பது, குளிர்ச்சிமிகுந்த காலத்தைக் குறிப்பது. மாதப் பெயர்களுக்கு ஓரைப் பெயர்களைச் சூட்டும் போது சுறவம் பெயரானது. இன்னும்  நாம் எண்ணிப் பார்க்கத் தக்கது சில உண்டு.

குயிலன்   :     அவை யாது?

அமுதனார் :   சித்திரை  என்ற மாதப்பெயர் சங்க கால இலக்கியங்களிலோ,
சங்கம் மருவிய கால இலக்கியங்களில் காணக் 
கிடைக்கவில்லை.

குயிலன்   :     அப்படியா? தை என்ற சொல்?

அமுதனார் :   தைஎன்ற சொல்  சங்க இலகியங்களில் இருக்கின்றது

         சங்க இலக்கியங்களில் தைத் திங்கள்

1.      "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" –    நற்றிணை
2.      "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" –   குறுந்தொகை
3.      "தைஇத் திங்கள் தண்கயம் போல்" புறநாநூறு
4.      "தைஇத் திங்கள் தண்கயம் போல" –  ஐங்குறுநூறு
5.     "தையில் நீராடி தவம்  தலைப்படுவாயோ" –  கலித்தொகை



குயிலன்  :       இதைக் கொண்டுமட்டும்  தைப்பிறப்புத்தான் தமிழ்ப் புத்தாண்டு 
                             என்று கூறிட முடியுமா? வேறு சான்று களுண்டா?

அமுதனார்:  வேறு சான்றுகளா? அடிப்படையான சான்றுகள் உண்டு. தம்பி! பொங்கலுக்கு முதல்நாளை என்னவென்று, சொல்வார்கள்?

குயிலன்  :       ‘போகி என்று சொல்வார்கள்.

அமுதனார் :  ‘போகி, ‘பொங்கல் ஆகிய இரு சொற்களைக் கொண்டே, பொங்கல்தான் புத்தாண்டு என்பதை அறிந்து கொள்ளலாம்.

குயிலன்   : அப்படியா! எப்படி?

               போகிப் பொங்கல்


அமுதனார் :     போதல், போக்குதல், போக்கு, போக்கி, போகி என்பன, போ எனும் வினையடிச் சொல்லிலிருந்து பிறந்தவை, ‘போகிஎன்னும் சொல், போக்குதல் என்ற பொருளைத் தாங்கி நிற்கும் சொல்லாகும். எதைப் போக்கியது? ஓர் ஆண்டைப் போக்கியது என்பதாகும். நம்மைப் போன்று சப்பானியர்களும் ஆண்டு இறுதியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதை  அறிய முடிகிறது.

               சூரியப் பொங்கல்

                             பொங்கு+அல்: பொங்கல். பொங்கல்,                
                             இது ஒரு தொழிற் பெயர். பொங்கல், 
                             புதிய தோற்றங் காட்டுதல். மேல் 
                             எழுதல் என்ற பொருளைத் தரும்.  
                             ‘பொங்கி எழுந்தான்என்பது, ஒருவன் 
                              தன் இயல்பு நிலையிலிருந்து மாறிப் 
                              புதிய தோற்றத்தோடு எழுந்தான் 
                              என்பது. கதிரவன் புத்தொளி காட்டி
                              புதிய தோற்றத்தோடு எழுதல் 
                              பொங்கல். இங்குக் கதிரவனின் 
                              புத்தொளிக்குப் பொங்கல் என்பது ஆகுபெயரானது.


தம்பி,போகிஓராண்டைப் போக்கியது. ‘பொங்கல்ஓராண்டின் புதிய வரவைக் காட்டியது. அதோடு, ‘தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழி இருக்கிறதே!அந்த முதுமொழியும், தைப் பிறப்புத் தமிழாண்டின் பிறப்பைக் காட்டுவதாகும். தைப் பிறத்தல் என்பது, தை மாதப் பிறப்பைக் காட்டுவதாக மட்டும் கருதிடக் கூடாது. அது, தை மாதத்தில் பிறக்கும் புத்தாண்டுப் பிறப்பைக் காட்டுவதாகும். ‘வழி பிறக்கும்என்பது, புதுவாழ்வுக்கு வழி ஏற்படும் என்பது. புத்தாண்டு பிறந்தால் புது வாழ்வுக்கு வழி ஏற்படும்.   

குயிலன்   :     அண்ணே, புதிய ஒளிபொங்கல் என்று தாங்கள் கூறியது எனக்குப் விளங்க வில்லை.

அமுதனார் :  அப்படியா, நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை.

குயிலன்   :    இடைமறித்துக் கேட்டதற்கு, மன்னிக்க வேண்டும்.

அமுதனார் :  தவறேதுமில்லை. இது உன் ஆர்வத்தை அது காட்டுகிறது. தம்பி! கதிரவன் தென்திசை நோக்கித் தன் செலவை (பயணத்தை) அப்படியே தொடராது, வடதிசை நோக்கித் தன் செலவை (பயணத்தை) மாற்றிக் கொண்டு செல்லும் பருவ கால மாற்றத்தைக் கொண்டே, ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் பழந்தமிழர்.
கதிரவன் புத்தொளி காட்டி மேற்செல்லுதலே பொங்கலானது. இன்றும், தமிழர், பொங்கலைச் சூரியப் பொங்கலென்று கூறிவரும் வழக்கத்தி லிருந்து, பொங்கல், கதிரவன் புத்தொளி காட்டி மேலெழும் பருவ மாற்றத்தைத் தெரிந்து கொள்ளலாம்.  

குயிலன்   :   அண்ணே! ஓர் ஐயம்?

அமுதனார் : என்ன?

குயிலன்   :     கதிரவன் தென்திசைச் செல்வதாகவும், வடதிசை செல்வதாகவும்  
கூறினீர்களே எப்படி? பிற கோளங்கள் கதிரவனைச் சுற்றி வருமா? கதிரவன் கோளங்களைச் சுற்றிவருமா?

அமுதனார் : மிகவும் நுட்டபமாகக் கேட்கின்றாய்.  வாழ்த்துகள்.தம்பி!
·           நிலம் தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ஒரு நாள்.
·     நிலத்தை நிலவு சுற்றுவது ஒரு மாதம்.
·           கதிரவனை நிலம்` ஒரு சுற்றுச் சுற்றி வருவது ஓர் ஆண்டு.  

குயிலன்   : ஆம், அறிவியல் அடிப்படை உண்மை.

அமுதனார் :  நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் நமக்குக் கதிரவன்  கிழக்கிலிருந்து எழுந்து, மேற்கில் மறைவது போலத் தோன்றும், அது ஒரு கற்பனை. அந்தக் கற்பனைதான், நம்மை, ‘கதிரவன் கிழக்கில் எழுந்தான், ‘கதிரவன் மேற்கில் மறைந்தான், ‘கதிரவன் சாய்ந்தான் என்றெல்லாம் கூற வைக்கிறது. இது உலக வழக்கு. இந்த உலக வழக்கைக் கொண்டுதான் கருத்து  விளக்கப் பெற்றது. கதிரவன் எதையும் சுற்றிவருவதில்லை. மற்ற கோளங்கள்தான் அதனைச் சுற்றி வருகின்றன.

குயிலன் :      இப்போது, விளங்குகிறது. புத்தாண்டு குறித்து மேலும்  
                           சொல்லுங்கள்?

அமுதனார் :    தம்பி! அறிவியல் அடிப்படையில் பல ஆய்வுகளை மேற் 
                           கொண்டு  ஆங்கிலப் புத்தாண்டு, கணிக்கப்பட்ட தென்பதை அதன்                  
                       வரலாற்றை ஆய்ந்தால் தெரிந்து கொள்ளலாம். அந்த ஆங்கிலப் புத்தாண்டிற்கும் தையில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இதனாலும், பழந்தமிழர் அறிவியல் அடிப்படையில் இயற்கையின் வழிநின்று, ஆண்டுப் பிறப்பை ஆய்ந்து கண்டவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

குயிலன் :   அண்ணே, அதைச் சற்று விளக்கிச் சொல்வீர்களா?

அமுதனார்: ஆங்கில ஆண்டின் முதல் மாதம். சனவரி. அந்தச் சனவரி பதினான்காம் நாளிலும், நான்காண்டுகளுக்கு ஒரு முறை  பதினைந்தாம் நாளிலும் தைப்பிறக்கும். இது முறையாக நிகழ்ந்துவருகிறது. ஆனால், சித்திரை முதல் நாள் இப்படி முறையாகப்  பிறப்பதில்லை.


குயிலன் :       உண்மைதான். அறிவியல் அடிப்படையில்  என்று 
                           கூறு கிறீர்களே! அதை மேலும் சற்று விளக்கிக் கூறுங்களே?

                ஆங்கிலப் புத்தாண்டு

அமுதனார் :       முன் காலத்தில் எகிப்த்தின் நைல் பேராறு திடீரெனப்             
                                பெருக்கெடுத்தோடி வந்து, கரையோர ஊர்களையும்
                                பயிர்களையும்உயிர்களையும் அழித்திடுமாம். இந்த வெள்ளப்  
                                பெருக்கு எப்பொழுது ஏற்படுகிறது என்பதை 
                                அறிந்துகொள்வதிலே பல ஆண்டுகள் அறிவியல்  அறிஞர்கள் 
                                ஆய்வு செய்தனராம்அதன் பயனாக வெள்ளப் பெருக்கு 
                                ஏற்படுவதற்கு முன் வானத்தில்சிரியசுஎன்ற சோத்திசு 
                                விண்மீன் (நட்சத்திரம்) தோன்றுவதைக் கண்டனர். அந்த 
                                விண்மீன் ஏறத்தாழ 365 நாட்களுக்கு ஒருமுறை 
                                தோன்றுவதைக் கணக்கிட்டு  அறிந்தனர்.  இந்தக் கணக்கீட்டு 
                                முறைதான் ஆண்டுக் கணிப்பிற்குக் கால் கோலிய 
                                தென்பார்கள்

     உரோமானியப் பேரரசனாகக் கி.பி.63-ல் அரியணை ஏறிய   
     சூலியசு சீசர் என்பவன், எகிப்த்தின் மீது படை நடத்திவந்த 
     போதுஎகிப்த்தியரின் இந்த ஆண்டு முறை,அவனைக்  
    கவர்ந்தது. அப்போது, உரோமாபுரியின் ஆண்டுக் கணிப்புக் 
    குழப்பத்தில் இருந்தது. அதனால், சீசர் எகிப்த்தியரின் ஆண்டுக் 
    கணிப்பு முறையை அலெக்சாண்டிரியாவின் சோன்சிசீன்சு 
    என்ற வானவியல் அறிஞரின் துணைக் கொண்டு சிறுமாற்றம் 
    செய்து, கி.பி.47ல் நடைமுறைப் படுத்தினானாம்.
               
                           அவனுக்குப் பிறகு, அரியணை ஏறிய ஏனைய உரோமானிய    
                           மன்னர்கள்  தங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆண்டுக் 
                          கணிப்பில் சிறுசிறு மாற்றங்கள் செய்தனர். இப்போதுள்ள 
                          ஆங்கில நாட்காட்டி நடைமுறையை உரோமானிய 13ஆம் 
                          போப்பாகிய \ கிரிகோரியன் கி.பி.1582ஆம் ஆண்டு நடைமுறைப் 
                          படுத்தினார்.

  இந்த ஆண்டுக் குறியீட்டு முறை, அடிப்படையிலேயே நம்   
  தமிழாண்டு உருவாகி இருப்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக 
 இருக்கிறது. வேறு எந்த மாதத் தொடக்கமும் இப்படிக் 
 குறிப்பிட்ட நாளில் வருவதில்லை.

 தம்பி, எகிப்த்தியர்களைப் போல், இன்னும் சொல்லப் போனால்
 அவர்களைவிட நாகரிகத்தில் சிறந்திருந்த தமிழர் காலத்தைக் 
 கணித்து ஆண்டை உருவாக்கி இருக்கமாட்டார்களா?
 நையில் ஆற்றின் படுக்கையிலே வாழ்ந்தவர்கள் புலம் 
 பெயர்ந்து சென்ற தமிழர்களே என்று சில ஆராய்சி யாளர்கள்  
 கூறுவதும் எங்குச் சிந்திக்கத் தக்கதாகும்.

குயிலன் :         தமிழரின் காலக் கணிப்பிற்கு வேறு சான்றுகளுண்டா?

அமுதனார்: தம்பி, எதிரிகளாலும், கடல் கோள்களினாலும், கறையான்களாலும், கடற் பெருக்கினாலும், ஆற்றுப் பெருக்கினாலும் தீயினாலும், வேற்று இனத்தவரின் கலையாலும் நாகரிகத்தாலும் நம்மவர் அறியாமையினாலும் எண்ணற்ற நூல்கள் அழிந்தனபலவற்றை இழந்தோம்.  

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னமே எழுத்துகளின் ஒலிப்புக் காலத்தை - மாத்திரையை உருவாக்கி இருக்கிறார்கள்.குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம் போன்ற எழுத்துகளின் ஒலிப்புக் காலத்தைக்கூட மிகநுட்டபமாகக் கணித்தவர் கள் தமிழர்கள். இந்த நுட்பத்தை மேலைநாட்டு அறிஞர்கள் எடுத்துக் காட்டி  வியந்து போகின்றனர்.

சிறுபொழுது ஆறு என்றும், பெரும்பொழுது ஆறு என்றும், காலத்தை பகுத்தனர். மாதங்களையும், கிழமைகளையும் வகுத்தனர்வான் மண்டலக் கோளங்களின் சுழற்சியைக் கணித்தனர். இவற்றிற் கெல்லாம், பெயர்களையும் சூட்டினர்.  காலக்  கணிப்பிற்கு இன்னும் எத்தனையோ சான்றுகளை எடுத்துச் சொல்லலாம்.

தம்பி, இன்று காணக் கிடைக்கின்ற கலை, இலக்கியம்,  இனத்தவரின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் துணைக்கொண்டு ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளில்  ஒன்றுதான், பொங்கலில்தான், தமிழ் ஆண்டுப் பிறக்கிறது என்ற உண்மை.

அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன இந்த உண்மையை நம்மவர் பகுத்தறிந்து பார்க்க மறுக்கின்றனர்; பழக்கத்திற்கு அடிமையாகி மயங்கி நிற்கின்றனர். அதனால் தான், தமிழ்மணம் சிறிதுகூட வீசாத ஓராண்டைத் தமிழாண்டு என்று போற்றிக் கொண்டாடுகிறனர்.

குயிலன் :  அண்ணே, இன்றைய காலக்கட்டத்தில் பொங்கல் என்றாலே புத்தரிசி போட்டுப் பொங்கல் வைப்பதைத்தானே கூறுகிறார்கள். அது எப்படி ஏற்பட்டது?

அமுதனார்: மிகப் பழமையான காலத்தில் உழவுத் தொழில் செய்யும் உழவர்களே, பெரும்பகுதியினராக இருந்தனர். அறிஞர்களால் கணிக்கப்பட்ட, ஆண்டுப் பிறப்பாகிய பொங்கல். உழவர்களின் அறுவடைக் காலத்தில் அமைந்ததால், கிடைத்ததை ஆக்கிப் படைத்துப் புத்தொளிக்காட்டிய கதிரவனைப் போற்றினர்; பழந்தமிழர்.  அந்தப் பழக்கந்தான் இன்றுவரை தொடர்கிறது. ஆனால், தமிழர் பொங்கலின் அடிப்படையை மறந்து விட்டனர்.

குயிலன் :   அண்ணே! மாட்டுப் பொங்கல் குறித்துச் சிறிது கூறுங்களே?

அமுதனார் :     தம்பி, உழைப்பின் பயனைப் பெற்று 
                            மகிழும்போது. அந்தப் பயனைப் 
                           பெறுவதற்குத் தனக்குத் தோள் 
                           கொடுத்துத் துணைநின்ற 
                           தன்னினும் அறிவில் குறைந்த (பசு)
                           வினத்தை மறவாமல் எண்ணிப் பார்த்து,  
                           போற்றினர், பழந்தமிழார்.  
                            இந்த நன்றி யுணர்வுமிக்கச் செயல், ‘மாட்டுப் பொங்கலானது’ 
                            மாட்டுப் பொங்கல் சிந்தனை தமிழரின் உயர்ந்த பண்பாட்டை 
                            நன்கெடுத்துக்  எடுத்துக்காட்டாகிறது.  அதனால்தான்
                            பொங்கலைப் பண்பாட்டு விழா என்றும் பொற்றுவார்கள்.

குயிலன் :   அண்ணே! கன்னிப்பொங்கல் என்று சொல்கிறார்களே, அதைப் பற்றிச் சிறிது கூறுங்கள்.

அமுதனார்: அதைக் காணுப் பொங்கல் என்பார்கள். பொங்கலின் மூன்றாம் நாள் உறவினர் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு உறவாடித் தங்கள் உறவைப் போற்றுவது காணும்பொங்கல் என்பதாம். இதுவே, பின் நாளில்  கன்னிப் பொங்கல் ஆனதென்பார்.

குயிலன்   :     அண்ணேகன்னிப் பொங்கலில் பருவப் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டால், திருமணம் கூடிவரும் என்கிறார்களே!

அமுதனார் : இதில் உண்மையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நம்பிக்கைகள் குறித்துப் பிறிதொரு நாள் பேசிக் கொள்ளலாம்.

குயிலன்   : அண்ணே! இன்னொரு வினா. 

அமுதனார் : தமிழ்ப் புத்தாண்டு குறித்துத்தானே?

குயிலன்   :     ஆம். திருவள்ளுவர் ஆண்டை ஏன் தமிழாண்டு என்று கூறவேண்டும்?

 அமுதனார்:    நல்ல வினா. ஆண்டுக் கணக்கென்பது, கதிரவன், நிலவு,  
                             விண்மீன் இவற்றின் அடிப்படைப் படையில்  கணக்கிடுவார்கள்.
பல நாடுகளில் மன்னர் ஆட்சி தொடங்கிய நாளும், மன்னர் பிறந்த நாளும், நாடுகளை வெற்றி கொண்ட நாளும், வரலாற்றில் பதிய வேண்டிய முகாமையான (முக்கியமான) நாள், வழிகாட்டிகள் பிறந்தநாள் எனப் பல்வகைகளில் ஆண்டுகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.

ஆங்கிலேயர்கள் கண்டு தேர்ந்தெடுத்த ஆண்டுப் பிறப்பிற்கு போற்றுவதற்குரிய ஏசு பெருமான் பெயரைச் சூட்டிப் போற்றினர். அந்த அடிப்படையில் தான், தமிழாண்டிற்குத் திருவள்ளுவர் ஆண்டெனப் பெயரிடப்பெற்றதுதமிழர் என்ற ஓர் இனம் உலகில் உண்டென உணர்த்திய- உணர்த்திக் கொண்டிருக்கின்ற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பிறப்பைத் தமிழாண்டுப் பிறப்பிற்குச்  சூட்டியது ஏற்புடைய செயல்தானே? 
               
குயிலன்  :      ஏற்புடைய செயல்தான். மறுக்கமுடியுமா! அண்ணே
                            திருவள்ளுவராண்டை யார் வகுத்துச் சொன்னது?

அமுதனார்:   திருவள்ளுவராண்டை ஆய்வு செய்த அறிஞ பெருமக்கள் பலர். அவர்களில் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரும் ஒருவர். அப்பெரியார் தலைமையில் 1921ஆம் ஆண்டு, தமிழகப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் ஒன்று கூடினர்; ஆய்வு செய்தனர்; தைம் முதல் நாளைத் திருவள்ளுவர் பிறப்பாக அறிவித்தனர். கிருத்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னம் திருவள்ளுவர் பிறப்பைக் கணக்கிட்டனர். இது, தமிழாண்டுக்கு ஒரு கால அளவைப் பெற்றுத் தந்தது.  

கால அளவைக் காட்டாத ஆண்டு ஓர் ஆண்டாகுமா? சித்திரைப் பிறப்பைக் காட்டும் அறுபது ஆண்டுகள், ஒன்றிலிருந்து கணக்கிடப்பட்டு, அறுபது முடிந்ததும், மீண்டும் ஒன்று, இரண்டு மூன்று எனத் தான் கணக்கிட வேண்டிவருகிறது.  இந்தச் சுற்றுவட்டம், ஆண்டுக் கணக்கீட்டு முறைக்கு ஒத்துவருவதாக இல்லை.  

குயிலன் :       இந்தத் திருவள்ளுவர் ஆண்டு முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

அமுதனார் : தமிழரின் பெருமை பாடும் இந்த அரிய செயலை ஏற்றுக் கொள்ளாதிருப்பார்களா? அறிஞபெருமக்களும், தமிழ் ஆர்வலர்-களும் ஏற்றுக் கொண்டு அதைப் பரப்பும் கடமையை ஆற்றினர்.

1972-ஆம் ஆண்டு, தமிழக அரசால் இவ்வாண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1983-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த .தி.மு.. அரசு, அனைத்து அலுவலகக் குறிப்புகளிலும் நிகழ்ச்சிகளிலும் இடம்பெறச் செய்தது.

தமிழ் நாளேடுகள், வானொலிகள், தமிழ் உணர்வு கொண்ட இயக்கங்கள் ஆகியவை திருவள்ளுவ ராண்டைப் பயன்படுத்தின.

குயிலன்   :     தமிழாண்டுக்கு ஒரு பெயரைச் சூட்டத்தான் வேண்டுமா?

அமுதனார் :     தம்பி, உலகில் காணும் பொருள், உணரும் பொருள், கற்பனை செய்யும் பொருள் ஆகியவற்றிற்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இது மரபு. பெயர்கள் சூட்டப்படாதவை நிலைபெற்று வாழ்வ-தில்லை. பொங்கல் என்ற பெயர்தான், தமிழரின் புத்தாண்டைக் காண்பதற்கு வழிவகுத்தது. அதற்கென  ஒரு சிறப்புப் பெயரைச் சூட்டும்போது, அது தனித் தன்மையைப் பெற்றுச் சிறக்கும்.

500 ஆண்டுகளுக்கு முன்னம், ஆங்கிலேயர் தங்கள் புத்தாண்டிற்கு, வாழ்வுக்கு வழிகாட்டும் ஏசு பெருமான் பெயரைச் சூட்டினார்கள்.

நாமும் நம் தமிழாண்டிற்கு ஓர் அடையாளத்தைப் பதிக்க வேண்டாவா? தமிழ் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் திருவள்ளுவர் பெயரைச் சூட்டியதில் என்ன குறை?

பொங்கல் தமிழாண்டுப் பிறப்பிற்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டவில்லை யென்றால், ஆரியச் சார்புடைய சித்திரைப் பிறப்பு நிலைத்து நின்று, தமிழரின் இனவுணர்வில்லாத கையாலாகாத தன்மையைக்  காட்டிவிடும்.   

குயிலன் :       இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம், கலைஞர் ஆட்சியில்   
                            பொங்கலைத் தமிழாண்டாக ஏற்றுக் கொண்ட, சட்டத்தைச் 
                            செயலலிதா ஆட்சியிலே நீக்கிவிட்டார்களே?

அமுதனார்: திருவள்ளுவர் ஆண்டை ஏற்றுக் கொள்ள முன்னம் தயக்கம் காட்டியவர்கள், பின்னம் ஏற்றுக்கொண்டனர். பொங்கலைத் தமிழாண்டாய்ச் சொன்ன தி.மு..வினரே, பொதுமக்கள் ஓட்டுக்காகப் பொங்கலைத் தமிழாண்டாய் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினர். இருந்தும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2.1.2009-ல் பொங்கலைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கலைஞர் அறிவித்துத் தம் ஆட்சியில்  சட்டமாக்கி நடைமுறை படுத்தினர். தமிழ் அறிஞர்கள் தமிழுணர் வாளர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அவர்களை வானளாவப் போற்றினர்.

இந்த நிலை நீடிக்கவில்லை. செயலலிதா அம்மையார் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2011-ல், அதே சட்டத்தைப் பயன்படுத்திச்  அதை எளிதாக  நீக்கி விட்டார்.

குயிலன்   :     இதற்கு என்ன காரணம்?

அமுதனார் : அறிவியல் காரணமோ, பண்பாட்டுக் காரணமோ என்று ஏதுமில்லை. வேறு காரணங்களுண்டு எனலாம்.  

குயிலன்   :     வேறு என்ன காரணங்களாக இருக்கலாம்?

அமுதனார் :  வேறு காரணங்களா!

1.    ஆரிய வழிபட்ட இனத்திற்கு ஆதரவு.
2.   தமிழைப் பற்றியோ தமிழ் இனத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமை.
3.    அரசியலில் கலைஞரின் மீதுள்ள எதிர்ப்புணர்வு.

இவற்றைத் தவிர்த்து வேறு என்ன சொல்வது?

இது போன்று, ஆரிய வழிபட்டோரின் கயமைச்செயல்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்று, பொங்கலின் பெருமையைத் தாழ்த்தும் செயல்.  அது, பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கிறது.

குயிலன்   :     அப்படியா! அது என்ன? 

அமுதனார் : தமிழரின் தனிப்பெரும் விழா, பொங்கல்  தமிழ்ப்புத்தாண்டு. இதை, வடவர் கையகப்படுத்திய ஐந்திரத்தில், அதாவது பஞ்சாங்கத்தில்  கரிநாள் என்று குறித்து வருகின்றனர்.

குயிலன்   :     கரிநாள் என்றால் என்ன?

அமுதனார் : கரிநாள் என்பது, தீய நாள், நல்ல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்புடைய நாளலன்று என்பது இதன் பொருள்தைப் பிறந்தால் நன்மைக்கு வழிபிறக்கும் என்று நல்ல நம்பிக்கையை வெளிப்படுத்தும் பொங்கலை, தீய நாள் என்று கூறுவது எத்துணைப் பெரிய கீழ்மைகுணம். இதைவிட ஆரியத்தின் சூழ்ச்சிக்குச் சான்றேதும் வேறு கூறவேண்டுமா?
                 
                            தம்பி, இதைத் தட்டிக்கேட்க. இதுவரை நாம் ஏதும் 
                            செய்யாதிருந்து வருகின்றோமே! இதுபோன்ற இழிவுகளைத் 
                            துடைக்காமல், இனத்தைப் பற்றி மொழியைப் பற்றி பேசுவதில் 
                            என்ன நன்மையைக் காணப் போகின்றோம்........  தம்பி! என்ன
                            ஏன் அமைதியாக இருக்கிறாய்?

குயிலன்  :    அண்ணே! மனம் எதையோ சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. நீங்கள் சொன்ன விளக்கங்கள்  மனநிறைவைத் தருகின்றன. உணர்வைத் தூண்டுகின்றன......  மிக்க நன்றி.

அமுதனார் : தம்பி, நான் எடுத்துச் சொன்ன விளக்கங்கள். நானாகக் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளல்ல. அறிஞபெருமக்கள் ஆராய்ந்து சொன்ன விளக்கங்கள்தான். இந்தக் கருத்துகள் இன்னும் நம் குமுகாயத்தவரிடையே  முறையாகப் பரப்பப்பட வில்லை. இந்தக் கடமையை இனவுணர்வுள்ளோர் எல்லாரும் மேற்கொள்ள வேண்டும். தம்பி! ‘முயற்சி திருவினையாக்கும்முயல்வோம் முயல்வோம் முயன்று கொண்டிருப்போம்.

இன்று, சித்தரையில் பிறப்பதாகக் கூறப்படும் 60 ஆண்டுகளுக்கு இட்டு வழங்கப்படும் பெயர்களைச் சற்றுப் பாருங்கள்.



1.   பிரபவ
2.   விபவ
3.   சுக்கில
4.   பிரமோதூத
5.   பிரஜோற்பத்தி
6.   ஆங்கிரஸ்
7.   ஸ்ரீமுக
8.   பவ
9.   யுவ
10.  தாது
11.  ஈஸ்வர
12.  வெகுதான்ய
13.  பிரசமாதீ
14.  விக்கிரம
15.  விஷு
16.  சித்திரபானு
17.  சுபானு
18.  தாரண
19.  பார்த்திப
20.  விய
21.  ஸர்வஜித்து
22.  ஸர்வதாரி
23.  விரோதி
24.  விக்ருதி
25.  கர
26.  நந்தன
27.  விஜய
28.  ஜய
29.  மன்மத
30.  துன்முகி
31.  ஹேவிளம்பி
32.  விளம்பி
33.  விகாரி
34.  சார்வரி
35.  பிலவ
36.  சுபகிருது
37.  சோபகிருது
38.  குரோதி
39.  விஸ்வாவசு
40.  பராபவ
41.  பிலவங்க
42.  கீலக
43.  ஸௌமிய
44.  ஸாதாரண
45.  விரோதிகிருது
46.  பரிதாபி
47.  பிரமாதிஷ
48.  ஆனந்த
49.  ராஷஸ
50.  நள
51.  பிங்கள
52.  காளயுத்தி
53.  ஸித்தார்த்தி
54.  ரௌத்திரி
55.  துன்மதி
56.  துந்துபி
57.  ருத்ரோத்காரி
58.  ரக்தாஷ
59.  குரோதன
60.  அஷய



 மேற்கண்ட 60 பெயர்களில் ஒன்றாவது பொருள் பொதிந்த தமிழ்ப் பெயர்களாக இருக்கின்றனவா என்பதைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். வடமொழிச் சொற்களைபெயர்களாகக் கொண்டுவரும் சித்திரைப் பிறப்பை எப்படித் தமிழாண்டுப் பிறப்பென்று கூறுவது? பொருத்தமாக இருக்குமா? சிந்திப்போமே!  




பொழுது
1. சிறுபொழுது (6):
2. பெரும்பொழுது (6):
(1) மாலை   (2 ) யாமம்    (3) வைகறை
(4) விடியல் (5) நண்பகல் (6) எற்பாடு
(1) கார்        (2) கூதிர்         
(3) முன்பனி    (4) பின்பனி
(5) இளவேனில் (6) முதுவேனில்

யாமம் - நள்ளிரவு, நண்பகல் - நடுப்பகல், வைகறை - விடியலுக்கு முன் இரவு, எற்பாடு - பகல்


காலம் / பொழுது / பருவம்
பருவம்:                           -                            மாதம் :
இளவேனிலற் காலம் (      இளம்வெப்பம்)
சித்திரை  வைகாசி
முதுவேனில் காலம்    (கடும்வெப்பம்)
ஆனி  ஆடி
கார் காலம்                 (மழைக்காலம்)
ஆவணி புரட்டாசி
கூதிர்க்  காலம்         (குளிர்க்காலம்)
ஐப்பசி கார்த்திகை
முன்பனி
மார்கழி தை
பின்பனிக் காலம்
மாசி பங்குனி



தமிழக ஆட்சி    தோராயமான கணிப்பு :

தமிழர் தன்னாட்சி               : பழங்காலம் முதல் கி.பி.200 வரை
சங்கம் மருவிய (களப்பிரர்) காலம்      : கி.பி.  200 முதல் கி.பி.600 வரை
பல்லவர் காலம்                 : கி.பி.  600 முதல் கி.பி 875 வரை
சோழராட்சி                     : கி.பி.  875 முதல் கி.பி. 1250 வரை
நாயக்கர் காலம்                 : கி.பி.  1250 முதல் கி.பி. 1750 வரை
ஐரோப்பியர் காலம்              : கி.பி.  1750 முதல் கி.பி. 1947 வரை.

                         (மற்றும் சில இடங்ளில் சில இனத்தவர் ஆட்சிகள்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக